ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஊர்வலம் - தினத்தந்தி

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி நேற்று ஊர்வலம் சென்றனர். அவர்களில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம்

அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களை தேர்ந்து எடுத்து வருகிறது. அதன்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித்தேர்வு வைத்தும், அவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றை கொண்டும் ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

அவ்வாறு 14 ஆயிரம் பி.எட். முடித்த பட்டதாரிகள் மற்றும் இடைநிலை பயிற்சி பெற்றவர்கள் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு அந்த பட்டியலை சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அவர்களுக்கு தற்போது கலந்தாய்வு நடைபெற்று பணிநியமனம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை மட்டுமே கொண்டு ஆசிரியர்களை பணிநியமனம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏராளமானவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

விஷம் குடித்தனர்

நேற்று அவர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் லாங்ஸ் கார்டன் வரை சென்று அங்கு சாலை அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து கோரிக்கை குறித்து பேச வாய்ப்பு அளிக்கும்படி போலீசாரிடம் கேட்டனர்.

ஆனால் அவர்கள் செவி சாய்க்கவில்லை. மாறாக அவர்களை கைது செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 4 ஆசிரியர்கள் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

உடனே அவர்கள் 4 பேர்களையும் ஆசிரியர்களே ஆட்டோவில் ஏற்றி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். அவர்களுக்கு உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பெறுபவர்கள் விவரம் வருமாறு:-

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள ராதாநல்லூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (29), சென்னை குரோம்பேட்டை சரஸ்வதிபுரம் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த கபிலன் (29), சேலம் மாவட்டம் வீரகனூர் பகுதியை சேர்ந்த செல்லத்துரை (31) மற்றும் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (29) ஆகியோர்

இவர்கள் 4 பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த மற்ற ஆசிரியர்கள் இரவு வரை உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post