வௌிநாட்டு முதலீடு கோடிகளில் குவிகிறது: ஒளிரப்போகுது இந்திய ரயில்வே


புதுடில்லி: இந்தியாவில் ஜப்பான் ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய முன்வந்துள்ள நிலையில், சீனா ரூ. 3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் 5 ஆண்டுகளில் இந்திய ரயில்வே சேவை சர்வதேச தரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆசியாவின் 3 மிகப்பெரும் பொருளாார வல்லரசுகளான சீனா, ஜப்பான் ஆகியவை இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஜப்பான் சென்றார். அப்போது வாரணாசியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவது, இந்தியாவில் புல்லட் ரயில் சேவையை துவக்குவது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்யப்போவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 
சீனாவும் ஆர்வம்:

ஜப்பானை தொடர்ந்து, சீன அதிபர் ஜி ஜிங்பிங், வரும் 16ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரை மரபுகளை மீறி, பிரதமர் நரேந்திர மோடி ஆமதாபாத் விமான நிலையத்தில் வரவேற்கவுள்ளார். மோடியின் இந்த செயல், சீனாவுடன் இந்தியா நெருங்கி செயல்பட விரும்புவதையே காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்திய பயணத்தின் போது, இந்திய ரயில்வேயை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


சீனா நம்பர் ஒன்:

உலகளவில் ரயில்வே துறையில் சீனா முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிவேக ரயில்கள், புதிய ரயில்பாதை அமைத்தல் மற்றும் அதிநவீன சிக்னல் அமைப்பதில் சீனா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. சீனாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 14 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் சுதந்திரத்திற்குப்பின் கடந்த 67 ஆண்டுகளில் 11 ஆயிரம் கி.மீ., புதிய ரயில் பாதைகளே அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீன அதிபரின் இந்திய பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, அந்நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் லியூ ஜியான்சோ, ரயில்வே துறையை மேம்படுத்துவது தொடர்பாக, இந்தியா சீனாவுடனான தனது ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்ள வலுவான மற்றும் உண்மையான விருப்பம் கொண்டுள்ளது. இந்தியா புல்லட் ரயில் சேவையை துவக்க விரும்பும் நிலையில், சீனா அதுகுறித்த சாதகமான சூழலை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 


3 லட்சம் கோடி முதலீடு:

இந்தியாவுக்கான சீன தூதர் லியூ யூபா நிருபர்களிடம் பேசுகையில், இந்தியாவில் 50 பில்லியன் டாலர் (ரூ. 3 லட்சம் கோடி) அளவுக்கு முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, துறைமுகங்கள் கட்டுதல், சாலைகள் அமைத்தல், நதிநீர் இணைப்பு, புல்லட் ரயில் சேவை ஆகியவற்றில் முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பானும், சீனாவும் போட்டு போடுவதால், விரைவில் உள்கட்டமைப்பிலும், ரயல்வே துறையிலும் இந்தியா முன்னேறிய நாடுகளைப் போல ஒளிரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. 

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post