இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது‘ என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி தனி நீதிபதியின் உத்தரவைஎதிர்த்து அரசு சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி கூறுகையில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை சரியல்ல என்ற அடிப்படையில் தான் தனி நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்வது சரியான நடைமுறைதான் என்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.எனவே தனி நீதிபதி ஆசிரியர் நியமனத்துக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஆசிரியர் பணிக்கு 16 ஆயிரம் பேரின் சான்றிதழ் ஏற்கனவே சாரிபார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் பணி நியமனத்துக்கு தடை விதித்து இடைக்கால நீதிபதி உத்தரவிட்டுஇருந்தார். இதனால் அவர்களுக்கு பணி வழங்க முடியவில்லை. தனி நீதிபதியின் உத்தரவு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
Tags
TET News