சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பணி இடங்களை அடையாளம் காண வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானாலும், அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டிய பணி இடங்களை அடையாளம் கண்டு அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அரசாணை கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு குறித்து கடந்த 2006–ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளையின் நிர்வாகி சீமச்சந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மை செயலாளர் முகமது நசுருதீன், ஆணையர் மணிவண்ணன்ஆகியோர் ஆஜராகி, நிலைய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 54 துறைகளில் 41 துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் கண்டறியப்பட்டு விட்டதாகவும்,13 துறைகளில் ஆய்வுப்பணி நடந்து வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது. அதிகாரிகள் மீது நடவடிக்கை இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கிற்கு சரிவர பதில் மனு தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய முடிவு செய்தோம். ஆனால், அரசு வக்கீலின் கோரிக்கையை ஏற்று, அதை நாங்கள் செய்யவில்லை.எனவே, அரசு துறைகளில் எவ்வளவு பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிரப்பவேண்டும் என்பதை அடையாளம் காணப்படவேண்டும். இந்த பணியை உடனடியாக மேற்கொள்ளவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். தேர்தல் அறிவிப்பு இந்த பணிகளை வருகிற மார்ச் 31–ந்தேதிக்குள் செய்து முடிக்கவேண்டும். அதேநேரம், தமிழக சட்டசபைக்கு தேர்வுஅறிவிப்பு வந்து விட்டது, அதனால் எங்களால் மார்ச் 31–ந்தேதிக்குள் பணியை முடிக்க முடியவில்லை என்று அரசு அதிகாரிகள் காரணம் கூறலாம். ஆனால், இப்போதே நாங்கள் தெளிவாக கூறுகிறோம்.சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்தாலும், அந்த அறிவிப்புஇந்த பணிக்கு தடையாக இருக்காது. மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை இடங்கள் அனைத்து துறைகளிலும் ஒதுக்கவேண்டுமோ, அதை கண்டறிந்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். இந்த வழக்கை வருகிற ஏப்ரல் 13–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர், ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post