நவம்பர் 1ல் 'தமிழ்நாடு நாள்' கொண்டாட தமிழக அரசு உத்தரவு






தமிழகத்தின் பிறந்த நாளை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1ல் 'தமிழ்நாடு நாள்' கொண்டாட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய தினம் கருத்தரங்கம், கவியரங்கம் நடத்தவும், மயிலாட்டம்,ஒயிலாட்டம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை பெறுவதற்கு முன் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் காரணமாக மொழிவாரி மாநிலமாக ஒரிசா 1936ல் அறிவிக்கப்பட்டது. தற்போது ஒடிசா என பெயர் மாற்றப்பட்டு உள்ளது.அதன்பின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை உள்ளடக்கிய 'மெட்ராஸ் ராஜதானி'யையும் மொழிவாரியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவர் மறைவை தொடர்ந்து வன்முறை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதாக 1953ல் அப்போதைய பிரதமர் நேரு அறிவித்தார்.அதன்பின் மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்கக்கோரி பல்வேறு தலைவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அதைத் தொடர்ந்து மிகப்பெரியதாக இருந்தமெட்ராஸ் மாகாணம் 'மெட்ராஸ் ஸ்டேட், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா' என 1956 நவ. 1ல் பிரிக்கப்பட்டது.மலையாளம் பேசும் மக்களும் கன்னடம் பேசும் மக்களும் தங்களுக்கென ஒரு மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவ. 1ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.கேரளாவில் 'கேரள பிறவி தினம்' என்றும் கர்நாடகத்தில் 'கன்னட ராஜயோத்ஸவா' என்றும் கொண்டாடப்படுகிறது.'தமிழகத்திலும் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட நவ. 1ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்' என சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.அதன்படி இந்த ஆண்டு நவ. 1ல் 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், மொழிக் காவலர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் வகையில் மிகச் சிறப்பாக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post