பாடப் புத்தகத்தில் மாற்றம் இருந்தால்,தகவல் தெரிவிக்குமாறு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சி.பி.எஸ்.இ., வாரியத்தில் இணைப்பு பெற்றுள்ள பள்ளிகளில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி பாடங்களுடன், மாநில மொழியும் கற்பிக்கப்படுகிறது.மாநில மொழி பாடங்களுக்கு, அந்தந்த மாநில பாடத்திட்ட புத்தகங்களே பின்பற்றப்படுகின்றன. அவற்றில், ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,க்கு தகவல் அளிக்க வேண்டும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், எந்த பள்ளியும் பாடப்புத்தகம் மாற்றம் குறித்து, தகவல் அளிக்கவில்லை. எனவே, ஏற்கனவே உள்ள பாடப் புத்தகத்தின் அடிப்படையில், மொழிப்பாட தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கப்படும்.
எனவே, தேர்வு நடக்கும் போது, பாடத்தில் இல்லாத வினா என்று, எந்த பள்ளியும் புகார் கூறக்கூடாது; அப்படி கூறினாலும், ஏற்க மாட்டோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் வந்துள்ளன.தமிழ் மொழி பாடம் நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், புதிய பாட புத்தகம் குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியத்துக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
Tags
kalvi news