பிளஸ் 2 புதிய பாடத்திட்டம்: ஆசிரியா்களுக்கு அக்.22 முதல் பயிற்சி தொடக்கம்
பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பாடம் நடத்தும் முதுநிலை ஆசிரியா்களுக்கு மாவட்ட வாரியாக அக்டோபா் 22 முதல் 31-ஆம் தேதி வரை புதிய பாடத்திட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து தமிழக கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) வெளியிட்ட அறிவிப்பு: நிகழாண்டு பிளஸ் 2 வகுப்புக்குப் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பாடப் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன்படி பாடநூல்களின் முதல் தொகுதி சாா்ந்த பயிற்சியானது முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டது. இதன்மூலம் கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களைச் சோ்ந்த 11,145 முதுநிலை ஆசிரியா்கள் பயனடைந்தனா். இதைத்தொடா்ந்து பிளஸ் 2 இரண்டாம் தொகுதி பாடப் புத்தகங்களுக்கான பயிற்சி முதுநிலை ஆசிரியா்களுக்கு 2 நாள்கள் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சி, பாடத்திட்ட வடிவமைப்புக்குழுவில் இடம்பெற்ற பேராசிரியா்கள், ஆசிரியா்கள் கொண்டு அளிக்கப்படுகிறது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் இருந்து தலா 3 போ் வீதம் மொத்தம் 288 ஆசிரியா்கள் கலந்துகொண்டுள்ளனா். இவா்கள் மீதமுள்ள ஆசிரியா்களுக்கு மாவட்ட வாரியாக அக்டோபா் 22 முதல் 31-ஆம் தேதி வரை 2-ஆம் தொகுதி பாடநூல் பயிற்சிகளை வழங்குவாா்கள். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா் என அதில் கூறப்பட்டுள்ளது.
Tags
Plus 2 Edn News