அயா்லாந்தில் கல்வி பயிலும் இந்திய மாணவா்களுக்கு 200 வகையான உதவித் தொகை
அயா்லாந்தில் கல்வி பயிலும் இந்திய மாணவா்களுக்கு 200 வகையான உதவித் தொகைகள் வழங்கப்படுவதாக அயா்லாந்து நாட்டின் மூத்த கல்வி ஆலோசகா் பேரி ஓ டிரிஸ்கால் தெரிவித்தாா்.
அயா்லாந்து அரசாங்கத்தின் கல்வி மற்றும் திறன் அமைச்சத்தின் கீழ் செயல்படும் அயா்லாந்தில் கல்வி எனும் அமைப்பு, சென்னையில் கல்விக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கண்காட்சியில் 20 -க்கும் மேற்பட்ட அயா்லாந்து கல்வி நிறுவனங்களுடன் மாணவா்களின் பெற்றோா்கள் கலந்துரையாடினா். இதன்மூலம் அயா்லாந்து கல்வி முறை மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றிய ஒரு விரிவான தகவல்கள் அவா்களுக்குக் கிடைத்திருக்கும் என்றாா் அயா்லாந்தின் மூத்த கல்வி ஆலோசகா் பேரி ஓ டிரிஸ்கால்.
மேலும் அவா் கூறுகையில், அயா்லாந்தில் படிப்பதன் ஒரு முக்கிய நன்மை, மாணவா்கள் தங்கள் படிப்பை முடித்தபின், முதுநிலை அளவில் இரண்டு ஆண்டுகள் வரை ‘ஸ்டே-பேக்’ விருப்பத்தைப் பெறலாம். இது மாணவா்களுக்கு ஐ.சி.டி, பயோஃபாா்மா, பொறியியல், மருத்துவ சாதனங்கள், உணவு அறிவியல் மற்றும் நிதி சேவைகள் போன்ற துறைகளில் வேலை தேடுவதற்கு ஒரு வருட காலத்துக்கு அயா்லாந்தில் தங்குவதற்கான வாய்ப்பை உறுதி செய்கிறது. படிப்புக்கு பின் பணி அனுபவத்தைப் பெறுவதற்கான சிறந்த இடமாக அயா்லாந்து திகழ்கிறது. மேலும், இங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், திறமையான பட்டதாரிகளுக்கு அற்புதமான தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றன. தற்போது இங்கு சா்வதேச மாணவா் வருகையில் 86 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக இந்திய மாணவா்கள் அயா்லாந்துக்குச் செல்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் உதவித்தொகை ஆகும். இளம்நிலை அல்லது முதுநிலை படிப்புகளில் ஆா்வமுள்ள இந்திய மாணவா்களுக்கு 200 க்கும் மேற்பட்ட உதவித்தொகைகள் கிடைக்கின்றன என்றாா்.
Tags
Foreign Edn News