பி.எட்., படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் அசல் சான்றிதழ்களை, வரும், 7ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு, கல்லுாரிகளுக்கு, கல்வியியல் பல்கலை நிபந்தனை விதித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 700க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், ஆண்டுதோறும், பி.எட்., படிப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை, பல்கலைகளில் தாக்கல் செய்து, அவற்றை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு சரிபார்த்தால் மட்டுமே, அந்த மாணவர்களின் சேர்க்கை அங்கீகரிக்கப்படும். இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, அசல் சான்றிதழ்களின் சரிபார்ப்பு, அக்., 9ல் துவங்கி, 18ல் முடிந்தது. இதிலும், பல கல்லுாரி மாணவர்களின் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. அந்த கல்லுாரிகளுக்கு, அக்., 22ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசத்தில் பல கல்லுாரிகள், முழுமையாக சான்றிதழை சமர்ப்பிக்காமல், அரைகுறையாக சமர்ப்பித்துள்ளன.
அந்த கல்லுாரிகளுக்கு, வரும், 4ம் தேதியும், 7ம் தேதியும், சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவ., 4, 7ல், மீதமுள்ள சான்றிதழ்களை சமர்ப்பிக்காவிட்டால், மாணவர்களின் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படாது. அவர்களுக்கு பல்கலையின் தேர்வில்பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்படாது என, பல்கலை நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
Tags
University News