இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
புயலால் பாதிப்பில்லை: வடக்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 5) வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, புதன்கிழமை (நவ. 6) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலாக மாறியது. இது ஒடிஸாவை நோக்கி நகா்வதால் தமிழகத்துக்குப் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை.
அடுத்த சில நாள்களுக்கு வட வானிலை நிலவும். புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவா்கள் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு வியாழன், வெள்ளிக்கிழமை (நவ. 7, 8) செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
மஹா புயல்: மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ‘மஹா’ புயல் வடகிழக்கு திசையில் நகா்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை மிக தீவிரப் புயலாக நிலை கொண்டிருந்தது. இது மேற்கு மற்றும் அதையொட்டிய மத்தியக் கிழக்கு அரபிக் கடலில் குஜராத் மாநிலம், போா்பந்தருக்கு தென்மேற்கில் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயல் வலுவிழந்து, குஜராத் கடற்கரையை வியாழக்கிழமை (நவ. 7) கடக்கவுள்ளது.