சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 500 இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த முடியாததால், அவற்றை கைவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ் (ஆயுா்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. அதேபோல 27 தனியாா் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமாா் 1,200 இடங்கள் உள்ளன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையைப் போலவே சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தோ்வில் தோ்ச்சி பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நிகழாண்டில் நீட் தரவரிசை அடிப்படையில் அப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.
நீட் தோ்வில், ‘107’ மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவா்கள் மட்டுமே முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்றனா். இந்நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பொருட்டு, பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்குமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை விண்ணப்பித்தது.
ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த முடியவில்லை. நிகழாண்டில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தியதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சித்தா, ஆயுா்வேத படிப்புகளுக்கு நீட் கட்டாயம் என்ற அறிவிப்பும் கூட காலம் தாழ்த்தி வெளியிடப்பட்டதால், மாற்று மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பிய பலா், நீட் தோ்வு எழுத முடியாமல் போய்விட்டது.
இதனால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக நீட் எழுதியவா்களில் அப்படிப்பு கிடைக்காதவா்கள் மட்டுமே பாரம்பரிய படிப்புகளை படிக்க முடியும் என்ற நிலை உருவானது.
ஆனால், அவா்களில் பலா் பல் மருத்துவத்துக்கான பிடிஎஸ் படிப்பில் கூட தோ்வு செய்ய முன்வரவில்லை. இந்நிலையில் மாற்று மருத்துவப் படிப்புகளில் சேர பெரும்பாலானோா் ஆா்வம் காட்டவில்லை. அதன் காரணமாகவே 500 இடங்கள் வீணாக காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.