-புது மாவட்டத்தின் புதிய போராட்டம்!
நெல்லை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்ததைப் போலவே கடந்த 22ஆம் தேதி தென்காசியில் தென்காசி மாவட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மாவட்டம் என்று அறிவித்து தொடங்கியும் வைத்துவிட்டார், ஆனால் கலெக்டர் ஆபீஸ் எங்கே என்று பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் முதல்வரின் உரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எங்கே அமையும் என்று குறிப்பிடவில்லை.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள அருண் சுந்தர் தயாள் நிகழ்ச்சி முடிந்த பின்னர், “மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆயிரபேரி அருகே அமைந்துள்ள விதைப்பண்ணைக்கு சொந்தமான இடத்தில் அமையும்” என்று கூறினார். இப்போது தென்காசி புதிய மாவட்டத்தின் முதல் சர்ச்சையாக இதுவே உருவெடுத்துள்ளது.
இதுபற்றி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி சார்பாக அவரிடம் பேசினோம்.
“தென்காசி மாவட்டம் தேவிபட்டணம் முதல் ஆம்பூர் வரையிலும் செங்கோட்டை . கோட்டைவாசல் முதல் இளையரசனேந்தல் வரையிலும் விரிந்து பரந்துள்ள பெரிய மாவட்டம். ஐந்து தொகுதிகளையும் 8 தாலுகாவையும், உள்ளடக்கிய மாவட்டம். அதனால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏற்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திட வேண்டும். அதற்காக நகரப் பகுதியிலேயே நிறைய இடங்கள் இருக்கின்றன.
ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்று அந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் தலைமை அலுவலகம் நகர எல்லை பகுதிக்குள் அமைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றினோம். அவை அனைத்தையும் மாவட்ட தனி அலுவலராக இருந்த தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அப்போதே கடிதம் மூலம் வழங்கினோம். ஆனால் அதே இட த்தையே தற்போது ஆட்சியர் அலுவலம் கட்டப் போவதாக அறிவித்தார். நான் அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்த பிறகே ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என்ற சிவபத்மநாதன் தொடர்ந்தார்.
மேலும் அந்த இடத்திற்கு சாலை வசதி தற்போது கிடையாது. இனிமேலும் ஏற்படுத்த முடியாது ஏற்படுத்த முடியாது. காரணம் எந்தத் திசையிலிருந்து சென்றாலும் அந்த இடத்துக்கு செல்ல குளத்தின் கரை வழியாகத்தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆயிரப்பேரியிலிருந்து பழைய குற்றாலம் செல்லும் ஊருக்கு தெற்கே ,பாதையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு மேற்கே அந்த இடம் அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு செல்லும் பட்சத்தில் கீழ்புறம் இருக்கிற குளத்தின் கரை வழியாகத்தான் செல்லவேண்டும். அதேபோன்று மத்தளம்பாறை முதல் குற்றாலம் வரை செல்கிற சாலையி லிருந்து இந்த இடத்திற்கு வரவேண்டும் என்றால் காட்டுப்பகுதி வழியாக இரண்டு கிலோமீட்டர் கடந்து வரவேண்டும். அந்த வழியிலும், குளம் இருக்கிறது. குளத்தை கடந்துதான் இந்த இடத்திற்கு வர வேண்டும். நன்னகரம் வழியாக ஒரு பாதை உள்ளது. அதுவும் குளத்தின் கரை வழியாகவே வர வேண்டியுள்ளது,
இந்த இடத்தை சுற்றி மூன்று பகுதிகளிலும் குளம் இருக்கிறது. எனவே அந்த இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு உகந்ததான இடம் இல்லை. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகிறவர்களுக்கு பாதுகாப்பு இருக்க வாய்ப்பில்லை. குளத்தின் கரை வழியாக வருகிற போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர, சங்கரன்கோயில், சிவகிரி பகுதியிலிருந்து வருகிறவர்கள் பேருந்து நிலையத்திலிருந்து இந்த இடத்திற்கு வரவேண்டும் என்று சொன்னால் அப் அண்ட் டவுன் ஆட்டோ கட்டணமே 500 ரூபாய் கேட்பார்கள்.
எங்களுடைய நோக்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அங்கே அமைவதை தடுக்க வேண்டும் என்பது அல்ல .பொது மக்களுக்கு போக்குவரத்து வசதி கொண்ட இடமாக கட்டிடம் கட்டுவதற்கு உகந்த இடமாக இருக்க வேண்டும் என்பதே.
மேலும் அவர், “ தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகிலேயே சிவில் சப்ளை குடோன் இருக்கிற பகுதி, உழவர் சந்தை அமைந்திருக்கிற பகுதி, ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்திருக்கிற பகுதி, மங்கம்மா சாலை பகுதியிலே இருக்கிற இடம் , பழைய தாலுகா அலுவலகம் அமைந்திருக்கிற வளாகங்களில் தேவையான இடங்கள் உள்ளன. தேவைப்பட்டால் தென்காசி சிறையை நகருக்கு வெளியே அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் கூட கலெக்டர் அலுவலகம் கட்டலாம். அல்லது மதுரை சாலையிலோ அல்லது நெல்லை சாலையிலோ அலுவலகம் அமைந்தால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிற பொதுமக்களுக்கு ஏற்றதாக அமையும் .
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் பேசினோம். “உள்ளபடியே கலெக்டருக்கு அந்த ஆயிரபேரிகை இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட உடன்பாடில்லை. ஆனால் அந்த இடங்களைச் சுற்றி ஓபிஎஸ் 40 ஏக்கர் வாங்கிப் போட்டிருப்பதாகவும், அண்மையில் அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்த இசக்கி சுப்பையா, எம்.எல்.ஏ. செல்வமோகன் தாஸ் ஆகியோருக்கு பல ஏக்கர் நிலங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அவர்களின் நிலங்களுடைய விலையை ஏற்றுவதற்காக அங்கே கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் எல்லாவற்றையும் கட்ட முடிவு செய்துள்ளார்கள். ஆனால் இதையெல்லாம் அங்கே கட்டினால் அந்தக் குளங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்” என்று மென்று விழுங்கினார்கள்.
புதிய மாவட்டம் புதிய போராட்டத்துக்கும் தயாராகிறது!