இந்தியக் கப்பற்படையின் கீழ் கேரள மாநிலம், எழிமலா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்தியக் கடற்படை பயிற்சி நிறுவனத்தில் (Indian Naval Academy, Ezhimala, Kerala) படைப்பயிற்சி மாணவர்கள் நுழைவுத் திட்டத்தில் (Cadet Entry Scheme) 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கவிருக்கும் நான்கு வருட அளவிலான பி.டெக் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வயது:
இந்தியக் கப்பற்படை பயிற்சி நிறுவனத்தில் நான்கு வருட அளவிலான இளநிலைத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் (B.Tech) 37 காலியிடங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டப்படிப்பினை நிறைவு செய்பவர்களுக்கு இந்தியக் கப்பற்படையில் உயர் அலுவலர் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்தப் படிப்பில் சேர்க்கைபெற விரும்புபவர்கள் 2-1-2001 முதல் 1-7-2003 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
மேல்நிலைத் தேர்வு (Senior Secondary Examination (10+2 Pattern) அல்லது அதற்கு இணையான தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் (PCM) பாடங்களில் மொத்தமாக 70% மதிப்பெண்களுக்குக் குறையாமலும், 10 அல்லது 12-ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமலும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், இளநிலைப் பொறியியல் மற்றும் இளநிலைத் தொழில்நுட்பம் (B.E/B.Tech) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான JEE (Main) – 2019 தேர்வில் கலந்துகொண்டிருக்க வேண்டும்.
மருத்துவத் தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் இந்தியக் கடற்படை நிர்ணயித்திருக்கும் மருத்துவத் தகுதிகளையும் உடற்தகுதிகளையும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு உயரத்தில் சிறிது தளர்வு அளிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த முழு விவரங்களையும் இந்தியக் கடற்படையின் இணையதளத்துக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்தியக் கப்பற்படையின் ஆட்சேர்ப்புக்கான www.joinindiannavy.gov.in எனும் இணையதளத்தில் பதிவுசெய்து 29.11.2019 முதல் 19.12.2019 வரை இணைய வழியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
மேல்நிலைக் கல்விச் சான்றிதழ், JEE 2019 மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, JEE 2019 அகில இந்தியத் தரப்பட்டியல் வரிசை அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். எண்ணிக்கை குறைக்கப்பட்ட பின்பு, தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் அனைவரும் பணிகளுக்கான தேர்வு வாரியத்தால் (Service Selection Board - SSB) 2020-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் பெங்களூரு /போபால் / கோயம்புத்தூர் / விசாகப்பட்டினம் / கொல்கத்தா ஆகிய இடங்களில் நடக்கும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சி தொடக்கம்:
தேர்வுசெய்யப்பட்டவர்கள் உடற்தகுதி மற்றும் மருத்துவத் தகுதியை நிறைவுசெய்த பின்பு, கேரளா, எழிமலாவில் அமைந்திருக்கும் இந்தியக் கடற்படை பயிற்சி நிறுவனத்தில், படைப்பயிற்சி மாணவர்கள் நுழைவுத் திட்டத்தில் (Cadet Entry Scheme) கடற்படையின் தேவைக்கேற்ப பயன்பாட்டு மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் (Applied Electronics &Communication Engineering), எந்திரவியல் பொறியியல் (Mechanical Engineering) அல்லது மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் (Electronics & Communication Engineering) எனும் நான்கு வருட இளநிலைத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர். இவர்களுக்கு 2020-ம் ஆண்டு ஜூலை முதல் பயிற்சிகள் தொடங்கும்.
கடற்படை பணிகள்
இந்தப் படிப்பின் நிறைவில் கட்டாயப் படிப்புகள், கடல் நேரம், மருத்துவ நிலை ஆகியவற்றை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு, துணை நிலை படை அதிகாரி (Sub Lieutenant) முதல் படைத் தலைவர் (Commander) பணிகள் வரை நிலையான சம்பள அடிப்படையில் பணியினைப் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பணிகளைப் பெறுபவர்களுக்கு 1 கோடி ரூபாய் வரையிலான குழுக் காப்பீடு மற்றும் பணிக்கொடை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
கூடுதல் தகவல்கள்:
இதுகுறித்த கூடுதல் தகவல்களை அறிய, இந்தியக் கப்பற்படையின் ஆட்சேர்ப்புக்கான www.joinindiannavy.gov.in இணையதளத்துக்குச் சென்று பார்க்கலாம்.