குரூப்4 பிரிவில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வில், முறைகேடு நடந்திருப்பதாக தேர்வானவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வு நடைபெற்று மிகக் குறைந்த நாள்களில் அதாவது 72 நாள்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தேர்வு முடிவுகளை பார்த்ததும், அங்குதான் முதலில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் இடம் பெற்று இருந்தனர். இதை கவனித்த பிறருக்கு இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் எழுந்தது.
கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களில் 15 பேர் மாநில அளவில் முதல் 15 இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனராம்.
ராமநாதபுரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பது பிற தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு, கேட்டபோது,
ஆவணங்களை சரிபார்த்த பின்பு தான் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.