தேர்வு முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி., எச்சரிக்கை


சென்னை: 'குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. யின் குரூப் 4 தேர்வு 2019 செப்டம்பரில் நடந்தது; 16 லட்சம் பேர் பங்கேற்றனர்; முடிவுகள் நவம்பரில் வெளியிடப்பட்டன. இதில் முதல் 100 இடங்களுக்கான பட்டியலில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியோர் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

டி.என்.பி.எஸ்.சி. செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி. யின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது எந்த பாரபட்சமும் இன்றி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் எட்டு தாலுகாக்களில் 128 தேர்வு மையங்களில் 33 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 497 பேர் தேர்ச்சி பட்டியலில் இடம்பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 40 பேர் முதல் 1 000 இடங்களுக்கான பட்டியலிலும் அவர்களில் 35 பேர் முதல் 100 இடங்களுக்கான பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 57 பேரில் 17 பேர் மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்ற 40 பேர் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரே தேர்வு மையத்திலோ அல்லது ஒரே தேர்வு கூடத்திலோ தேர்வு எழுதவில்லை.

ராமேஸ்வரத்தில் ஆறு மற்றும் கீழக்கரையில் மூன்று மையங்களில் பரவலாக தேர்வு எழுதியவர்கள் ஆவர். ஆனாலும் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை துவங்கியுள்ளது. விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் மிகுந்த கவனமுடன் ஆய்வு செய்யப்படுகின்றன. எவ்வித பாரபட்சமுமின்றி விசாரணை செய்யப்பட்டு உண்மை நிலை விரைவில் அறிவிக்கப்படும். இந்த விசாரணையில் தவறுகள் கண்டறியப்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி மிக கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே 2017ல் நடந்த குரூப் 2-ஏ தேர்விலும் முதல் 100 இடங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக மற்றொரு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்தும் டி.என்.பி.எஸ்.சி. விசாரணை நடத்தி வருகிறது.


Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post