அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு பி.எல். படிப்புகளுக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு பி.எல்., ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். படிப்புகளுக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
2014-15 கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த பி.ஏ.,பி.எல்., பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் மூன்றாண்டு பி.எல். (ஹானர்ஸ்), பி.ஏ.,பி.எல். ஹானர்ஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வை அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது. இப்போது அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு பி.எல். படிப்புகளுக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் ஆகியவை பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கானக் கலந்தாய்வு செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
பொதுப் பிரிவினருக்கு செப்டம்பர் 22, 23 தேதிகளிலும், எஸ்.டி., எஸ்சிஏ., எஸ்.சி. பிரிவினருக்கு 24-ஆம் தேதியும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு 25-ஆம் தேதியும், பிற்படுத்தப்பட்டோருக்கு 26-ஆம் தேதியும், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு 27-ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Tags
kalvi news