பள்ளிகள் முதல் கல்லுாரிகள் வரை, நுழைவு தேர்வு முதல் போட்டி தேர்வுகள் வரை, பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. தேர்வு எழுதுவோருக்கு, எவ்வளவு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினாலும், ஏதாவது ஒரு வழியில், முறைகேடுகளை அரங்கேற்றுகின்றனர். கடந்த கல்வி ஆண்டில், நீட் தேர்வில் மாணவர்கள் செய்த முறைகேடுகள், நாடு முழுவதும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கர்நாடகாவில், ஒரு தனியார் பள்ளியில், தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, அவர்களின் தலையில் பெட்டியை கவிழ்த்தி, தேர்வு எழுத வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், தேர்வு முறைகேடுகளை தடுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இதன் ஒரு கட்டமாக, தேர்வு மையங்களில், மொபைல் போன், ப்ளூடூத், ஆன்லைன் கருவிகள் போன்றவற்றின் செயல்பாடுகளை தடுக்க, ஜாமர் கருவிகளை பொருத்த, கல்லுாரி, பல்லைகளுக்கு, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தேர்வு நடக்கும் போது, அந்த மையத்தை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவுக்குள், மொபைல் போன் நெட்வொர்க்குகள் இயங்காமல், ஜாமர் கருவியை பொருத்த வேண்டும்.
தேர்வு மையத்தில் உள்ளவர்களை தவிர, பொதுமக்களுக்கு ஜாமர் கருவியால் பாதிப்பு இருக்க கூடாது. இதற்கான பாதுகாப்பு விதியை பின்பற்றி, அரசு துறைகளிடம் சரியான அனுமதி பெற வேண்டும் எனவும், யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.