தென்காசி
தென்காசி மாவட்டம் தொடங்கப்பட்டதையடுத்து, முதல் மக்கள் குறைதீர் கூட்டம் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சுப்பராஜா திருமண மண்டபத்தில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.
காலை 9 மணியில் இருந்தே மக்கள் மனு அளிக்க வரத் தொடங்கினர். மண்டபத்தின் ஒரு வாயில் வழியாக ஆட்சியர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் செல்ல பயன்படுத்தப்பட்டது. மற்றொரு வாயில் வழியாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்களின் உடைமைகளை போலீஸார் தீவிர சோதனை செய்தே அனுப்பினர்.
காலை 11 மணிக்கு குறைதீர் கூட்டம் தொடங்கியது. மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் தனி வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதிக்கு ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் நேரில் சென்று, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். குறைதீர் கூட்டம் நடந்த மண்டபம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மண்டபத்துக்கு வெளியிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் மனு அளித்தனர்.
மனுக்கள் பதிவு கணினி வழியின்றி நேரடியாக பதிவு செய்யப்பட்டன. இதனால், மனுக்களை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. கூட்டம் நடந்த மண்டபத்தில் ஒரு இடத்தில் மட்டும் கழிப்பறை இருந்தது. அதனை ஆண்கள் பயன்படுத்தினர். பெண்கள் கழிப்பறைக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அடுத்து நடைபெறும் குறைதீர் கூட்டத்தின்போது, தற்காலிக கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.
1100 மனுக்கள் குவிந்தன
தென்காசியில் நடைபெற்ற முதல் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு ரூ.2.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார். 10 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான உத்தரவை வழங்கினார். நேற்று ஒரே நாளில் 1100 பேரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டங்களில் சராசரியாக 500 முதல் 1000 மனுக்கள் பெறப்படும். ஆனால், புதிதாக உருவான தென்காயில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளித்துள்ளனர்.