நாட்டின் முக்கிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இப்படி கூறயிருப்பது, ஏற்கனவே கவலையில் உள்ள அரசினை மேலும் சற்று கவலையில் ஆழ்த்தும் என்று தான் கூற வேண்டும்.
FICCI ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டமைப்பில் பேசிய எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார், அரசின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் அடையக் கூடிய ஒன்று தான். ஆனால் அது அரசு நினைத்த படி 2024 - 25ல் அடைய முடியுமா என்று தான் தெரியவில்லை. மேலும் மத்திய அரசின் இந்த இலக்கினை அடைய தனியார் முதலீடுகள் அவசியம் என்றும் கூறியிருந்தார்.
அரசின் 5 டிரில்லியன் டாலர் இலக்கினை நாங்கள் நிச்சயம் சந்திப்போம். அதில் எந்த சந்தேகமும்மில்லை. ஆனால் அதற்கான காலக்கெடு தான் சரியாக தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளில் நாம் இதை சாதித்தாலும் சாதிக்கலாம். ஆனால் அரசின் இந்த குறிப்பிட்ட இலக்கினை எப்போது அடைய முடியும் என்று பதிலளிப்பது மிகவும் கடினமான ஒரு கேள்வியாகும். ஆனால் நாங்கள் நிச்சயம் 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடைய முடியும். இது முதலீட்டு பின்னணியில் தான் உள்ளது என்றும் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசின் முதலீடுகள் மட்டும் மத்திய அரசின் பொருளாதார இலக்கினை அடைய போதுமானதாக இருக்காது. குறிப்பாக உள்கட்டமைப்பு துறையில் பெரிய அளவிலான முதலீடுகள் தேவை. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தும். இதில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும், முதலீட்டை அதிகரிக்கும் போது தான் சாத்தியமாகும்.
பொருளாதார மந்தநிலை நிலவுவதாகவும், மந்த நிலையை போக்க அரசாங்கம் இரண்டு லட்சம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்றும் ஃபிக்கி தலைவர் சங்கீதா ரெட்டி கூறியுள்ளார். மேலும் அரசின் நிதிப்பற்றாக்குறையில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தினாலும், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பை மீண்டும் உயர்த்துவதற்காக பொருளாதாரத்தில் குறைந்தபட்சம் 1 - 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான வழியை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சங்கீதா கூறியுள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் அரசுக்கு செலுத்த வேண்டிய பில்கள் குவிந்து வருகின்றன. மேலும் உணர்வை அதிகரிப்பதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை. இது மேலும் பொருளாதாரத்தை மீண்டும் துரிதப்படுத்தும் என்றும் கூறியுள்ளார். அரசின் இந்த பொருளாதார இலக்கினை அடைய அரசாங்கத்தினாலோ அல்லது தொழில்துறையினராலோ மட்டும் அடைய முடியாது. அதை அடைய அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றும் சங்கீதா கூறியுள்ளார்.